Saturday, June 6, 2009

சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று 1956-ல் அறிவிக்கப் பட்டதும், நாடாளுமன்றத்துக்கு முன்னால் காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழினத் தலைவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, கொழும்பில் தமிழர் சொத்துகளைச் சூறையாடியது யார்? பண்டா - செல்வா ஒப்பந் தத்தை நிறைவேற்றும்படி 1958-ல் அறப்போரில் ஈடுபட்டபோது, தமிழர் பலரைப் படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களிடம் பாலியல் பலாத்காரம் நடத்தி, அவர்களுடைய உடைமைகளைத் தீக் கிரையாக்கியது யார்? தென்னிலங்கையிலிருந்து பல்லாயிரம் தமிழர் தமிழகத்துக்கும், ஈழ நிலத்துக்கும் புகலிடம் தேடி ஓடச்செய்தது யார்? யாழ்ப்பாணத்தில் 1974-ல் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தபோது, வெடி குண்டு வீசி மோசமான தாக்குதலை முன் நின்று நடத்தியது யார்? மலையகத் தமிழர் மீதும், தெற்கில் வாழ்ந்த அப்பாவித்தமிழர் மீதும் 1977-ல் வெறித் தாக்குதல் நடத்தி, இனக்கலவரத்தை வளர்த்தது யார்? பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவந்து 1970 ஜூலையில் தமிழ் இளைஞர்கள் மீது நரவேட்டை நடத்தியது யார்? 'தமிழரின் அறிவுக்கோயில்' என்று கொண் டாடப்பட்ட யாழ்நகர் நூலகத்தின் 95 ஆயிரம் நூல்களை எரித்துச் சாம்பலாக்கியது யார்? 1983 ஜூலை 25 அன்று வெலிக் கடை சிறையில் 37 தமிழ் இளைஞரும் 27-ம் நாள் 18 தமிழரும் குரூர மாகக் கொல்லப்பட்டது யாரால்?

முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு, ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் என்று எந்த உரிமை மறுக்கப்பட்டாலும் உறக்கத்திலிருந்து எழாத தமிழரையும், பல்லாயிரம் ஈழத் தமிழர் பலியான நாளில் குடும்ப உறவுகளை மத்திய அமைச்சர்களாக்க புதுடெல்லி புறப்பட்ட தமிழினத் தலை வரையும், நம் இந்திய அரசு சரியாகவே இனம் கண்டு வைத்திருக்கிறது. அதனால்தான் அது ராஜபக்ஷேவுக்கு அரியணை தாங்கி ஆலவட்டம் வீசுகிறது. தமிழினத்தின் புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.

'பாண்டியனின் வழி நீயா? இமயக்கோட்டில் பறந்திருந் தது உன் கொடியா? இலங்கை நாட்டை ஆண்டவர்கள் உன்னவரா? கலிங்கர் மண்ணை அதிரடித்தது உன்குலமா? கடல்கள் மூன்றைத் தாண்டியவர் பரம்பரையா? புட் பகத்தில், சாவகத்தில் கொடி போட்டான் பிள்ளையா நீ? மாண்ட வரலாற்றினுக்கும் உன்றனுக்கும் மயிரளவும் தொடர்பில்லை, எதற்கு வார்த்தை?' என்று சரியாகத்தான் சொன்னார் கண்ணதாசன்!

தமிழருவி மணியன்

No comments:

Post a Comment